சிங்கம் - FIR: "
படம் ஆரம்பித்தவுடன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என்று தடபுடலாக ஆரம்பித்தவுடன். வேட்டைக்காரன், சுறா எல்லாம் கண் முன்னே வந்துவிட்டு போனது. தைரியத்தை வர வழைத்துக்கொண்டு உட்கார்ந்தால் சூர்யாவின் 25 படம் என்று போட்டார்கள். கடவுளை வேண்டிக்கொண்டு என்னைத் தயார் படுத்திக்கொண்டேன்.
”சென்னை” என்று காண்பித்துவிட்டு நல்ல வேளை கண்ணகி சிலையும், சென்டரல் ஸ்டேஷனும் காண்பிக்கவில்லை. அதற்காக இயக்குனருக்கு சபாஷ்.
வில்லன் பிரகாஷ்ராஜ் அதே கெட்டப், அதே மேனரிஸம், அதே குங்குமப் பொட்டு. கூட பங் தலையும், ஒத்த டோலாக்கு போட்ட அடியாட்கள். சென்னையை அறிமுகம் செய்து வைக்க சென்டரல் ஸ்டேஷன் பயன் படுத்தாமல் வில்லனை அறிமுகம் செய்து இவை எல்லாம் உபயோகப்படுத்திவிட்டார்.
ஊரில் இருக்கும் தாதாக்கள் எல்லாம் இவர் கட்டுப்பாட்டில் தான் என்று காண்பிக்க முதல் சீன், கூட இருந்தே குழி பறிக்கும் ஒரு தாதாவை போட்டு தள்ளி தான் ரொம்ப முரட்டு குணம் படைத்தவன் என்று நமக்கு சொல்ல முதல் சீன். பல சினிமாவில் நாம் பார்த்து பழகிப் போன டாட்டா சூமோ வில்லன் படம் என்று டைரக்டர் நமக்கு முதல் சீனிலேயே உணர வைக்கிறார்.
நல்லூரில் ஆரம்பிக்கிற கதை. நல்லூர் என்று தூத்துக்குடியில் இருக்கும் ஒரு பசுமையான கிராமம். வீடுகள், மரங்கள், விவசாயம், ஆடு, மாடுகள், பெரிய ஓட்டை போட்ட காதுகளை உடைய கிழவிகள் என்று எதையும் காண்பிக்காமல் ஒரு வீடு, ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்று காண்பித்த இயக்குனருக்கு அடுத்த சபாஷ்.
சூர்யா - அந்த ஓட்டு வீடு போலீஸ் ஸ்டேஷனில் தான் ‘பாரத் சிமிண்ட்ஸ்’ விளம்பரத்தில் தேவர் மகன் மீசையுடன் வரும் அதே சூர்யா எஸ்.ஐயாக வேலை பார்க்கிறார். கோயில் உண்டியலைத் திருடிக்கொண்டு போகும் சில்லரைத் திருடர்களை ஏதோ பெரிய ரவுடி கும்பல் போல துரத்தி துரத்தி துவம்ஸம் செய்கிறார். பெரிய ஹீரோ என்று எப்படி காண்பிக்க வேண்டாமா ? சரி கடைசியில் இதே மாதிரி காட்சிகள் பிரகாஷ் ராஜுடன் இருக்க போகிறது என்று நமக்கு தெரிந்தாலும், நம்மை உட்கார வைத்திருப்பது திரைக்கதையும் பணம் கொடுத்து வாங்கிய டிக்கெட்டும்.
விவேக் - சூர்யா இருக்கும் அதே ஸ்டேஷனில் ஒரு கண்ணைச் சிமிட்டிக்கொண்டு அசட்டு ஜோக் அடித்துக்கொண்டு ஏட்டாக இருக்கிறார். சிவாஜி படத்தில் ரஜினிக்கு பின்னாடி வருகிறார், இங்கே சூர்யாவிற்கு பின்னாடி. “எரிமலை எப்படிப் பொறுக்கும்?” என்ற பொங்கி எழுந்து ஜட்டிக்குள் இருக்கும் பல்பையும், பின்னாடி இருக்கும் எதையோ ஒன்றையும் அடிக்கடி ஃபூஸ் செய்துக்கொள்கிறார். நடிகர் சிவாஜி போல இதுலயும் இமிடேட் செய்தாலும் இந்த முறை சிரிப்பு வரவில்லை. சிவாஜி போலவே அவருக்கு வயசானது காரணமாக இருக்கலாம். இல்லை, பத்மஸ்ரீ வாங்கியதால் வயசாகிவிட்டதா என்று தெரியலை. பெட்டர் லக் நெக்ஸ் டைம்.
அனுஷ்கா - வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் சுட்டி ஹீரோயின். இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் ஏதாவது ஒரு பெண் இருந்தால் நிச்சயம் அடிவாங்குவார். ஆனால் சினிமாவில் இவர் ஹீரோவை லவ் செய்ய வேண்டும், அல்லது ஹீரோ இவளை லைவ் செய்ய வேண்டும். தூத்துக்குடியில் இவ்வளவு அழகான அக்கா இருக்கிறார்கள் என்று தூத்துக்குடி மக்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தேவர் மகன் மீசை வைத்திருந்தாலும், சூர்யாவிற்கு இவர் அக்காவாகத் தெரிகிறார். சன் பிக்சர்ஸுக்கு ஒரு படத்தில் நடித்தால் அடுத்த படம் ஃபிரியா நடித்துக்கொடுக்க வேண்டும் என்று ஏதாவது காண்டரக்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. அம்மணி ‘தாராளமா’கவே நடித்து கொடுத்திருக்கிறார். ஒரே ஆச்சரியம் இவர் வரும் சில காட்சிகள் கதை ஓட்டத்துக்கு ஒத்து போகிறது.
வசனம் : பஞ்சை நூலாக்கி, நூலை பெட்ஷீட்டாக்கிவிட்டார். பஞ்ச் மிஸ்ஸிங். இருந்தாலும் சில இடங்களில் நன்றாகவே இருக்கிறது. மசாலாப் படத்துக்கு ஏற்ற வசனங்கள்.
பாடல்கள்: சன் டிவியில் விளம்பரத்தில் வரும் பாடல்கள் மாதிரியே படத்திலும் வருகிறது. சரியான நேரத்துக்கு பாடல்கள் வருவதால் பிழைத்தது. அனுக்ஷா அப்பா கல்யாணத்துக்கு சம்மதித்தவுடன் ”பாட்டை போடுயா சீக்கிரம்” என்று பின் சீட்டிலிருந்து ஒருவர் கத்தினார். தமிழர்களுக்கு தான் எத்தனை ஐ.க்யூ ! கடைசி பாடல் நீல நிறத்தில் வேட்டைக்காரன் செட்டை நினைவு படுத்துகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களை பிழைத்துக் கொண்டார். பின்னனி இசை சிங்கம் போல உறுமுகிறது.
ஒளிப்பதிவு: மற்ற ஒளிப்பதிவாளர்களை போல தானும் சிலவற்றை செய்து பார்க்கலாம் என்று சில காட்சிகளில் முயன்று இருக்கிறார். பாடல் காட்சிகளில் பரவாயில்லை.
திரைக்கதை: இடைவேளியின் போதே க்ளைமேக்ஸ் ஆரம்பித்துவிடுகிறது ஒரு பிளஸ். பிரகாஷ் ராஜ் காய்களை நகர்த்த அதே காய்களை கொண்டு இவர் வில்லனுக்கு ஆப்பு வைக்க பல படங்களில் பார்த்தது தான் என்றாலும் போர் அடிக்காமல் போகிறது. தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் சூர்யா சென்னை போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது அங்கே காணும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. இப்படி பல காட்சிகள் இருப்பதால் படம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது. ஹரி எந்த சாமியை வேண்டிக்கொண்டு படம் எடுத்தார் என்று தெரியவில்லை ஆனால் பல காட்சிகளில் ‘சாமி’ பாதிப்பு இருக்கிறது.
மற்றவை: மனோரமா, நாசர், ராதாரவி, யுவராணி, போஸ், தியாகு என்று நமக்கு தெரிந்தவர்களையும், அருவாள், கப்படா, பைக், கார், ஹெலிகாப்டர், ரயில், கப்பல்னு மசாலா படத்துக்கு தேவையானவற்றை உபயோகப்படுத்தி கதையை நல்லூரில் ஆரம்பித்து நெல்லூரில் முடித்துவிட்டார் ஹரி.
சிங்கம்: ‘புலி’த்த மாவு தோசை
இட்லிவடை மார்க் : 5.5/10
பிகு: ஹரிக்கு ‘சிங்கம்’ பத்தாவது படமாக வெளிவருகிறது. அடுத்த படமும் இதே மாதிரி எடுத்தால் பத்தோடு பதினொன்று என்று சொல்லிவிடுவார்கள் :-)
"
Saturday, May 29, 2010
Saturday, May 01, 2010
Subscribe to:
Posts (Atom)